Monday, 9 September 2013


 

சிறுநீரகத்தைக் காக்க நாம் அறிய வேண்டிய விடையங்கள் !!மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது சிறுநீரகம் ஆகும். மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப்பதுதான் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.
இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்தான் சிறுநீரகம் இந்த சிறுநீரகம் கருவின் நான்காவது மாதத்திலிருந்து அதனுடைய இயக்கத்தை தொடங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது இயங்குகிறது. வயிற்றின் பின் பகுதியில் விலா எலும்பிற்குக் கீழே, பக்கத்திற்கு ஒன்றாக சற்று மேலும் கீழும் இறங்கி காணப்படுகிறது. சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு.
சிறுநீரகத்தின் செயல்பாடுகள்: இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சுத்திகரிக்க அனுப்பப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அதில் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீராக வெளியேறுகிறது.
மீதி அனைத்தும் மீண்டும் இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால் உடலிலுள்ள அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன. இரத்தம் சுத்தமடைகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மட்டும் சிறுநீரகத்தின் வேலையல்ல. மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதும் சிறுநீரகத்தின் வேலைதான்.
உடலின் திரவ நிலையை சம நிலையில் பராமரிக்கிறது. இரத்த அழுத்தத்தை சம நிலைப்படுத்துகிறது. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான சுரப்பினை சுரக்கச் செய்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சமப்படுத்தும் தன்மை சிறுநீரகத்திற்கு உண்டு. அமில, காரத்தன்மைகளையும், சோடியம் பொட்டாசியம், அம்மோனியம் போன்றவற்றை சரிவிகிதத்தில் சமன்செய்யும் பணியையும் சிறுநீரகம் சிறப்பாக செயல்படுத்துகிறது.
நெப்ரான்: இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை பிரித் தெடுக்கிறது. சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன. மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர் குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது.
சிறுநீரகம் சீராக செயல்படவில்லை யென்றால்: இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப் படும். தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும். மூச்சுத் திணறல், நினைவிழத்தல் இரத்தக் கொதிப்பு ஆகியவை உண்டாகும்.
சிறுநீரகம் சரியாக செயல்படாததால் ஏற்படும் அறிகுறிகள்: யூரியா மற்றும் வேதிப் பொருட்கள் அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுவதால் சிறுநீர் சரியாக பிரியாது. சிறுநீர் சரிவர பிரியாததால் மூச்சுத் திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம், கை நடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல் போன்ற ஒருசில அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்: சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகம் சிறுத்து காணப்படும். பரம்பரையாகவும், பாதிக்கப் படலாம். இரத்தக் கொதிப்பு, பாம்புக்கடி, கதண்டு வண்டுக்கடி, மலேரியா, உயிர்க்கொல்லி மருந்து உட்கொண்டவர்கள், வயிற்றுப் போக்கு அடிக்கடி உள்ளவர்கள், பிரசவ காலங்களில் உண்டாகும் இரத்தப்போக்கு, அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும், நீர் அதிகம் அருந்தாதவர் களுக்கும், மது போதை பொருட்கள் உட் கொள்பவர்களுக்கும், அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கும், உடல் பயிற்சியில்லாதவர்களுக்கும் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புண்டு.
சிறுநீரகத்தைக் காக்க:
* உடல் பருமன் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
* புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மது, போதை பழக்கம் இருக்கக் கூடாது.
* அடிக்கடி வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
* எளிதில் சீரணமாகும் உணவுகளை உட் கொள்வது நல்லது. சிறுநீரை அடக்குதல் கூடாது.
* தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.
* வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பொதுவாக வாழைத்தண்டு, 3 விரலளவு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம் 4, சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, நல்ல மிளகு 4, பூண்டு பல் 4, கொத்துமல்லி இலை தேவையான அளவு, கறிவேப்பிலை 20 இலை, இலவங்கப்பட்டை 2 கிராம் எடுத்து 3 குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1 குவளை அளவு வந்தபின் எடுத்து காலை மாலை இருவேளை என வாரத்தில் 2 நாட்கள் அருந்தி வந்தால் சிறுநீரகக் கோளாறுகளை தவிர்க்கலாம். இது பக்க விளைவில்லாத மருந்தாகும். கழிவு நீக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகங்களை பாதுகாக்க மேற்கண்ட நடை முறைகளை பின்பற்றுவது நல்லது.

Sunday, 8 September 2013


 

பெண்கள் நகை அணிவது தான் அழகா ?பெண்கள் முன்னேற்றம் என்றால், ஆண்களைப் போன்ற எல்லா உரிமைகளும் வசதிகளும் பெற்றிருப்பதுதான். “நள்ளிரவில் அழகான ஒரு சிறு பெண் தன்னந்தனியே சில மைல்கள் நடந்து செல்லக்கூடிய சமூக அமைப்பு ஏற்பட்டாலொழிய நம் நாட்டில் நாகரிகம் வளர்ந்திருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.” என்று காந்தியார் எழுதியிருப்பதாக நமக்கு நினைவிருக்கிறது. இன்று படிப்பும் நாகரிகமும் வளர வளர, பெண்களின் உரிமை குறைந்து கொண்டு தானிருக்கிறது. இதற்கு ஆண்களின் தீய நடத்தை மட்டுமே காரணமல்ல. பெண்களின் தவறான வாழ்க்கை இலட்சியமும் ஒரு காரணமாகும்.
“படித்த பெண்களும், பட்டதாரிப் பெண்களும், பணம் படைத்தவர் வீட்டுப் பெண்களும் மனித சமுதாயத்துக்காகப் பணியாற்றுவதே கிடையாது. மோட்டார் கார், நகை நட்டுகள், உயர்தர உடைகள், உல்லாசப் பொழுதுபோக்கு, (சினிமா, நாடகம், இசைவிழா, அரட்டைக் கச்சேரி போன்றவை) ஆகிய ஆசைகளைத் தவிர இவர்களுக்கு வாழ்க்கை இலட்சியம் என்பதே பெரும்பாலும் இருப்பதில்லை.”
கொத்துக் கொத்தாக நகை அணியும் பித்து நம்குலப் பெண்களை அட்டைபோல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அளவுக்கு மிஞ்சி நகையணிவதைத்தான் நான் இங்குக் குறிப்பிடுகிறேன். ஓரளவு நகைகளுக்கு மேல் அணிகிறவர்களுக்குத் தண்டனை அல்லது வரி விதிக்கச் சட்டமியற்றும் சர்க்காரை நான் வரவேற்கிறேன். நகை அணிவதால் உயிருக்கே ஆபத்து நேரிடுவதும் உண்டு. ஆடைகளுக்கென்று அபரிமிதமாகப் பணத்தை அள்ளி இறைத்து வாழ்க்கையில் அல்லலுறும் நம் குலத்தவரை எண்ணியும் இரங்குகிறேன். கைத்தறித் துணிகளை நாம் கட்டிக் கொண்டால், கைத்தறி நெசவாளரின் துயரத்தைப் போக்குவதுடன், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் குறைக்க முடியும் என்று சென்னையில் நடைபெற்ற நாடார் மகாசன சங்க 23-ஆவது மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய உயர் திருவாளர் நாகர்கோவில் டாக்டர் ஜான் ஹிலக்கையா அவர்கள் எடுத்துக் காட்டியிருப்பதை வரவேற்கிறோம். அறிவுரையைப் பாராட்டுகிறோம்.
நாடார் குலப் பெண்களைக் குறித்துக் காட்டும் இவர் இப்படிக் கூறியுள்ளாரெனினும், செல்வர் வீட்டுப் பெண்களுக்கும் இக்கூற்றுப் பொருந்தியதாகும். இத்துறையில் கடந்த 30 ஆண்டுகளாகப் பிரச்சாரம் செய்து வருகின்ற சுயமரியாதை இயக்கம் ஓரளவு உணர்ச்சியூட்டியிருக்கிறது. காந்தியார் அவர்களின் பிரச்சாரமும் ஓரளவு வெற்றி தந்திருக்கிறது. என்றாலும் இந்த நகைப் பித்தும் உயர் தரமான உடைப்பித்தும் பணம் படைத்த வீட்டுப் பெண்களைக் கடுமையாகப் பற்றிக் கொண்டிருக்கிறது.
இவள் இன்னார் மகள் அல்லது இன்னார் மனைவி, இவ்வளவு சொத்துக்குச் சொந்தக்காரி என்று பிறர் கூறிப் புகழ வேண்டும் என்பதற்காகவே அலங்காரப் பதுமைகளைப் போல் 5000, 10,000 ரூபாய்க்கு மேற்பட்ட உடைகளைச் சுமந்துகொண்டு திரிகின்றார்களேயல்லாது, இவள் இன்ன தொழில் நிபுணத்துவம் பெற்றவள்! இவள் இந்தத் துறையில் திறமைசாலி என்ற பெயர் வாங்கவேண்டுமென்ற எண்ணமோ இத்தகைய பெண்களுக்கிருப்பதில்லை.
பணத்தைச் சேமித்துப் பத்திரப்படுத்த முடியாத பழங்காலத்தில் நம் பெண்கள் நடமாடும் பாங்குகளாகவும், இரும்புப் பெட்டிகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். ஆனால், பணத்தைச் சேமிக்கக்கூடிய பல நூறு துறைகள் பெருகிக் கிடக்கின்ற இந்தக் காலத்தில் இது அவசியமா என்பதைப் பணம் படைத்த வீட்டுப் பெண்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நகையணிவதுதான்அழகு என்றால், நகையணியாத ஆண்கள் அழகாயில்லையா? நகை என்பது பெண்களின் உரிமைக்குப் பூட்டப்பட்டிருக்கின்ற பவுன்விலங்கு என்பதைப் பெண் இனம் மறக்கக் கூடாது. நகைகளிலும், உயர்தரமான உடைகளிலும் பாழாக்கப்படுகின்ற பணம், குடும்பத்துக்கோ, சமுதாயத்துக்கோ பயன்படாமல் வீணாகிறது.
இதை எப்படித் தடுக்க முடியும்? திரு. ஹிலக்கையா அவர்கள் கூறியிருப்பதுபோல் தண்டனையோ வரியோ விதித்தாக முடியாது. தண்டனையை அனுபவித்து விடுவார்கள், குடிவெறியர்கள். இன்று துணிந்திருப்பதுபோல வரியையும் கொடுத்து விடுவார்கள், பணம் படைத்தவர்களாதலால்.
ஒருக்கால் நகையைப் பறிமுதல் செய்வது என்ற மாதிரியான சர்வாதிகார உத்தரவு பிறப்பிக்கப்பட்டால்தான் முடியும். ஜனநாயக முறைகளால் இப்பேர்ப்பட்ட சமுதாய வெறிக் குணங்களை ஒழிக்க முடியாது. “அளவுக்கு மீறிய நகை” என்ற பாதுகாப்பு இருக்கக்கூடாது.
மக்களிடையே அறிவு பரவுவதன் மூலமேதான் இந்த மனப்பான்மை அடியோடு மாறவேண்டும். நெற்றியில் நாமமோ விபூதியோ அடித்துக் கொண்டு வருகின்ற பள்ளிச் சிறுவனைக் கண்டால், உற்ற பள்ளிச் சிறுவர்கள் எவ்வாறு கைதட்டி நகைத்துக் கேலி செய்கிறார்களோ அதுபோல, நடமாடும் நகை அலமாரிகளாகக் காட்சியளிக்கின்ற பெண்களைக் கண்டு (பைத்தியக்காரரைச் செய்வதுபோல்) மற்ற பெண்கள் கைதட்டிக் கேலி செய்யக் கூடிய நிலைமை தமிழர் சமுதாயத்தில் ஏற்பட வேண்டும்.
படித்த பெண்களும், பட்டதாரிப் பெண்களும், பணக்காரர் வீட்டுப் பெண்களுமே இத்துறையில் மற்ற நகைப்பித்துப் பெண்களுக்கு நல்வழி காட்டக்கூடியவர்களாக விளங்க வேண்டும்.
எந்த நாட்டையும் பீடிக்காத இந்த நகைப் பித்துப் பீடை தமிழ்நாட்டைப் பிடித்திருக்கிறது. பணம் படைத்த ஒரு சிலரைப் பார்த்து, நடுத்தரக் குடும்பப் பெண்களும் நகைப்பித்துப் பிடித்தவர்களாகி விடுகிறார்கள். இதனால் சச்சரவும், திருமணத் தடைகளும் பெண் இனம் துணையில்லாது வெளிச் செல்ல முடியாத வேதனை நிலையும் ஏற்பட்டிருப்பதைத் தவிர நன்மை ஏதாவது உண்டா? பெற்றோர்களும் பெண்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
 
வலி நிவாரண மாத்திரைகள் எச்சரிக்கை !!
உடல்வலி மற்றும் தலைவலிக்காக பெண்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக அளவில் வலிநிவாரணி மாத்திரைகள் உட்கொள்பவர்கள் விரைவில் கேட்கும் திறனை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
ப்ரூபின், பாரசிட்டமால் போன்ற மாத்திரைகள் பெண்கள் அதிகம் உபயோகிக்கும் மாத்திரைகள். இந்த மாத்திரைகள் உபயோகிப்பதனால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக 1995 முதல் 2009 ஆம் ஆண்டுவரை 14 ஆண்டுகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 31 வயது முதல் 48 வயது வரை 62000 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் வலி நிவாரண மாத்திரை சாப்பிட்ட 13 சதவிகிதம் பெண்களின் காது கேட்கும் திறன் குறைந்துள்ளது தெரியவந்தது.அவற்றில் ஒரு ரக மாத்திரையை வாரத்துக்கு 2 தடவை உபயோகித்தால் 24 சதவிகிதம் செவிட்டு தன்மையும், மற்றொரு ரக மாத்திரையை வாரத்துக்கு 6 தடவை பயன்படுத்தினால் 21 சதவிகிதம் செவிட்டு தன்மையும் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடும் பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதில்லை என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்களுக்கு செவிட்டுத்தன்மை ஏற்படுவதாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Saturday, 7 September 2013


                                        அம்மாவின் கஷ்டங்கள்
மகன் வேலைக்கு சென்றதும் தந்தை ஓய்வு பெறுவார்...

ஆனால் தாய்க்கு என்றும் ஓய்வு இல்லை. கணவனுக்காக உழைப்பாள்...
மகனுக்காக உழைப்பாள்...
பேரன், பெயர்த்திக்காக உழைப்பாள்...

அவளின் இறுதி மூச்சு இருக்கும் வரை அனைவருக்காகவும் உழைத்துக்கொண்டே இருப்பாள்...!

"அம்மா."



Wednesday, 4 September 2013

செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைக்காதீங்க.. ‘அது பொசுங்கிருமாம்’!


cell phone in the pocketசெல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைத்தால் விதைப் பை சேதமாகிப்போய் விடும் என்று மும்பை ஐஐடி பேராசிரியர் டாக்டர் கிரீஷ் குமார் எச்சரித்துள்ளார்.
செல்போன் என்பது ஒரு குட்டி பகவதியாம்.. ஸாரி ஸாரி.. குட்டி மைக்ரோவேவ் அடுப்பு போலவாம். பொசுங்கிப் போய் விடுமாம் விதைப் பை. மும்பையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில்தான் கிரீஷ் குமார் இப்படி ஒரு குண்டைப் போட்டுள்ளார்.

மொபைல் போன் டவர்களால் புற்றுநோய் ஆபத்து

வீடுகளுக்கு அருகில் மொபைல் போன் டவர்களை வைப்பதால் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக புற்று நோய் உள்ளிட்ட பாதிப்புகள் வருவதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

மலட்டுத்தன்மையும் வந்து சேரும்

தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வந்தால் மலட்டுத்தன்மையும் வருமாம். குறிப்பாக பேன்ட் பாக்கெட்களில் போனை வைத்திருந்தால் அது ஆண்களின் விதைப் பையை காலி செய்து விடுமாம். இதனால் வெறும் பைதான் இருக்கும்.. குழந்தைப் பேறுக்கு குட்பை சொல்லி விட வேண்டியதுதான்

காபி, ஊறுகாய் மாதிரி

எப்படி அதிகம் காபி சாப்பிட்டால், ஊறுகாய் சாப்பிட்டால் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் உள்ளதோ அதேபோல கதிர்வீச்சாலும் புற்று நோய் பாதிப்பு அதிகம் வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதாக கூறினார் கிரீஷ் குமார்.

காது சவ்வு கிழிஞ்சிடும்

தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டே இருந்தால் காது சவ்வு கிழிந்து காது ஓட்டையாகிப் போய் விடுமாம். மேலும் காது நரம்புகளும் பாதிக்கப்பட்டு காது கேக்காதாம்…

கதிர்வீச்சு நல்லதுதான்

ஆனால் பாபா அணு ஆய்வுக் கழகத்திலிருந்து வந்திரு்த ஸ்ரீகுமார் பானர்ஜி என்பவர் பேசுகையில் புற்றுநோயாளிகளுக்கு கதிர்வீச்சு மருந்தாக பயன்படுகிறது. ஆனால் அது எந்த அளவுக்கு உடலுக்குள் போக வேண்டுமோ அது மீறி விடக் கூடாது. மீறும்போதுதான் ஆபத்து என்றார்



கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய்  !!வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.
 வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.
வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக் காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.

Saturday, 31 August 2013




                      சென்னையில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் அமல் PDF



சென்னையில் ஆட்டோகளுக்கான குறைந்தபட்ச கட்டணமாக
முதல் 1.8 கிலோமீட்டருக்கு ரூ.25 எனவும்,
ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ.12 எனவும்
நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட கட்டண விகிதம் ஞாயிற்றுக்கிழமையே (ஆக.25) அமலுக்கு வந்துள்ளது. புதிய கட்டண விகிதத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய அக்டோபர் 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Printஇந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னையில் உள்ள 77 ஆயிரம் ஆட்டோக்களுக்கும் ஜி.பி.எஸ். வசதி, டிஜிட்டல் பிரிண்ட்டருடன் கூடிய மீட்டர்கள் ரூ.80 கோடியில் இலவசமாகப் பொருத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்டோக்களில் பயணிப்போர் கூடுதலாக 50 சதவீத கட்டணத்தை இரவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
காத்திருப்புக் கட்டணம் 5 நிமிஷங்களுக்கு ரூ.3.50 என்ற வீதத்தில் ஒரு மணி நேரத்துக்கு ரூ.42 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு :
தமிழகம் முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. இதில் சென்னை நகரத்தில் மட்டும் 71 ஆயிரத்து 470 ஆட்டோக்கள் உள்ளன. இந்த ஆட்டோக்களுக்கான கட்டணம் 2007-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது.
எரிபொருள் விலை, உதிரி பாகங்கள் விலை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கான சம்பளம் ஆகியவை பல மடங்கு உயர்ந்துவிட்டதால் இந்தக் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்களும், நுகர்வோர் அமைப்புகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது.
இதற்கிடையில், ஆட்டோக்களுக்கான கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பான அனைத்து காரணங்களையும் பரிசீலித்து முடிவு எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, போக்குவரத்து அமைச்சர் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள், நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற முத்தரப்புக் கூட்டம் சென்னையில் ஆகஸ்ட் 10-ல் கூட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஆக.22-ம் தேதி நடைபற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் விரிவான விவாதத்துக்குப் பிறகு பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பயனடையும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அதன்படி, சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கான புதிய கட்டண நிர்ணயம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விகித அட்டையை செப்டம்பர் 15-க்குள் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் அல்லது அந்த அலுவலகத்தால் நடத்தப்படும் சிறப்பு முகாம் மையத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
பயணிகளுக்கு ரசீது: சென்னையில் இயங்கி வரும் ஆட்டோக்களில் இடத்தைக் காட்டும் கருவிகள், அதாவது, ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய டிஜிட்டல் பிரிண்ட்டர்கள் பொருத்தப்பட்ட ஆட்டோ மீட்டர்கள் ரூ.80 கோடி செலவில் இலவசமாகப் பொருத்தப்படும். இதன் மூலம் பயணித்த தூரம் மற்றும் அதற்கான கட்டணம் அடங்கிய ரசீது பயணிகளுக்கு வழங்கப்படுவதோடு மட்டுமில்லாமல், பயணிகளிடமிருந்து சரியான கட்டணம் வசூலிக்கப்படுவது உறுதிசெய்யப்படும். மேலும், ஆட்டோக்களின் இயக்ககங்களின் கண்காணிக்கவும் வழிவகை செய்யப்படும்.
ஆபத்துகால பட்டன்: ஆட்டோ மீட்டரில் புதிய பட்டனும் பொருத்தப்படும். ஆட்டோவில் பயணிப்போருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால், ஆட்டோ மீட்டருடன் பட்டனை (டஹய்ண்ஸ்ரீ ஆன்ற்ற்ர்ய்) பயணிகள் அழுத்தலாம். இதன்மூலம், பயணிகள் ஆபத்தில் இருப்பது கட்டுப்பாட்டு அறைக்கு தெரியவந்து, அதனடிப்படையில் காவல்துறையினர் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓட்டுநர் உரிமம், வாகன அனுமதி ரத்து: ஆட்டோக்களின் இயக்கங்களை போக்குவரத்துத் துறையும், காவல்துறையும் தீவிரமாகக் கண்காணிக்கும். மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். இதுதவிர, வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு மட்டுமில்லாமல், அதன் இயக்கம் முடக்கப்பட்டு, அனுமதி ரத்து செய்யப்படும்.
பொதுவான புகார் எண்: ஆட்டோவில் பயணிப்போர் புகார் அளிக்க ஏதுவாக, பொதுவான புகார் எண் உருவாக்கப்பட்டு, அந்த தொலைபேசி எண் ஒவ்வொரு ஆட்டோவிலும் பிரதானமாக எழுதப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
புதிய கட்டண விவரம்...
முதல் 1.8 கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ.25 - ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ.12
இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்டோக்களில் பயணிப்போர் இரவுக் கட்டணமாக கூடுதலாக 50 சதவீதத்தைச் செலுத்த வேண்டும்.
காத்திருப்புக் கட்டணம் ஒவ்வொரு 5 நிமிஷத்துக்கு ரூ.3.50-- ஒரு மணி நேரத்துக்கு ரூ.42
புதிய கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய அக்.15 வரை அவகாசம்.
ஆட்டோ பயணிகளுக்கான பொதுவான புகார் தொலைபேசி எண் உருவாக்கப்படும்
கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆட்டோ ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதோடு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அனுமதி ரத்து செய்யப்படும்.

  சுருக்கமாக...  
சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு...
* முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்துக்கான ஆட்டோ கட்டணம் ரூ.25 என்றும், ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கு கட்டணம் ரூ.12 என்றும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
* இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்டோக்களில் பயணிப்போர் கூடுதலாக 50 சதவீதத்தை இரவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
* காத்திருப்புக் கட்டணம், ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கு ரூ.3.50 என்ற வீதத்தில், ஒரு மணி நேரத்துக்கு ரூ.42 என நிர்ணயம் செய்யப்படுகிறது.
* இந்தத் திருத்திய கட்டணம் இன்று (நேற்று) முதல் நடைமுறைக்கு வருகிறது.
* திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விகிதம் நாளிதழ்களில் பிரசுரம் செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் பயணிகளிடமிருந்து கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.
* திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விகித அட்டையை 15.9.2013க்குள் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அல்லது வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினால் நடத்தப்படும் சிறப்பு முகாம் மையத்திலிருந்தும் ஆட்டோ ஓட்டுநர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
* மாற்றி அமைக்கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய 15.10.2013 வரை அவகாசம் வழங்கப்படும்.
* இந்தியாவிலேயே முதன் முறையாக, சென்னைப் பெருநகரில் இயங்கி வரும் ஆட்டோக்களில் இடத்தைக் காட்டும் கருவியு (ஜி.பி.எஸ்) யுடன் மின்னணு இலக்க அச்சடிக்கும் இயந்திரத்துடன் ( எலக்ட்ரானிக் டிஜிட்டல் பிரிண்ட்டர்) கூடிய மீட்டர், விலை ஏதுமில்லாமல் அரசு செலவில் பொருத்தப்படும். இதற்காக அரசுக்கு ரூ.80 கோடி செலவு ஏற்படும்.
இதன் மூலம் பயணித்த தூரம் மற்றும் அதற்கான கட்டணம் அடங்கிய ரசீது பயணிகளுக்கு வழங்கப்படும். பயணிகளிடமிருந்து சரியான கட்டணம் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்படும். ஆட்டோக்களின் இயக்கங்கள் கண்காணிக்கப்படும்.
* ஆட்டோவில் பயணிப்போருக்கு ஏதேனும் ஆபத்து நேரும் சூழ்நிலை உருவானால், ஆட்டோ மீட்டருடன் பொருத்தப்பட்டுள்ள அபாய பொத்தானை (பேனிக் பட்டன்) பயணிகள் அழுத்தலாம். இதன் மூலம், பயணிகள் ஆபத்தில் இருப்பது கட்டுப்பாட்டு அறைக்கு தெரிய வந்து, அதன் அடிப்படையில் காவல் துறையினர் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஆட்டோக்களின் இயக்கங்களை போக்குவரத்துத் துறையும், காவல் துறையும் தீவிரமாக கண்காணிக்கும். இந்தக் கண்காணிப்பின் போது, மாற்றி அமைக்கப்பட்ட கட்டணத்துக்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் லைசன்ஸ்கள் ரத்து செய்யப்படும். வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், அதன் இயக்கம் முடக்கப்பட்டு, பர்மிட் ரத்து செய்யப்படும்.
*ஆட்டோவில் பயணிப்போர் புகார் அளிக்க ஏதுவாக, பொதுவான புகார் எண் உருவாக்கப்பட்டு, அந்த தொலைபேசி எண் ஒவ்வொரு ஆட்டோவிலும் எழுதப்படும். இவ்வாறு அரசு அறிவித்துள்ளது.